
முருகனின் அறுபடை வீடுகள்-திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் -சுப்பிரமணிசுவாமி கோயில்
திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஒரு குகைக்கோவிலாகும்.

ஆரம்பத்தில் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்தது… இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே “திருப்பிய பரங்குன்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி “திருப்பரங்குன்றம்” ஆனதாக கூறுவர்.
சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் எனும் பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காண இயலாத காட்சி ஆகும்.
இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. இங்கு தெய்வானையை மணம்முடித்த கோலத்தில் அருளுகிறார். சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணியன் வேல் வாங்கி, சூரனை ஆட்கொண்டு வெற்றிவேலுடன் முருகன் வந்து அமர்ந்த இடம் இதுதான்.
ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாற்றப்படுகிறது. புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்படும்.
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே ஆகும். திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனை வணங்குவோம்…
வாழ்வின் சகல நன்மைகளையும் பெற்றிடுவோம்.